அறிமுகம்:
நாம் கண்களால் பார்ப்பவற்றின் தகவல்களை மூளைக்கு அனுப்புவது பார்வை நரம்பு. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பார்வை நரம்பை கண் நீர் அழுத்த நோயானது பாதிக்கும். கண் நீர் அழுத்தத்தால் கண்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு படிப்படியாக பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு, பார்வையிழப்பு ஏற்படும். பார்வை பாதிக்கப்பட்டால் முற்றிலும் குணப்படுத்த முடியாது. எனினும், ஆரம்ப நிலையிலேயே இந்த பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம். கண்களில் அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால் வருடத்திற்கு ஒருமுறை கண்களைப் பரிசோதனை செய்துகொள்ளவும்.
காரணங்கள் & அபாயக் காரணிகள்:
பொதுவாக, கண்களில் ஒரு திரவம் இருக்கும். கண்களிலேயே உருவாகும் இந்த திரவமானது கண்களுக்கு பலூன் போன்ற அமைப்பைத் தருகிறது. ஆரோக்கியமான கண்களில் பழைய திரவமானது தானாக கண்களிலிருந்து வெளியேற்றப்பட்டு புதிதாக உற்பத்தியாகும். ஆனால் கண் நீர் அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட கண்களிலிருந்து பழைய திரவமானது வெளியேறாமல் கண்களிலேயே தேங்கி இருக்கும். கண்களில் தேங்கும் இந்த திரவமானது கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். பார்வை நரம்பை வெகுவாக பாதிக்கும்.
பின்வரும் காரணிகளால் கண் நீர் அழுத்தம் ஏற்படலாம்:
- பரம்பரைக் காரணிகள்
- கிட்டப் பார்வை
- தூரப் பார்வை
- வயது
- கார்டிகோ ஸ்டிராய்டு மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல்
- கண்களில் அடிபடுதல்
- சர்க்கரை நோய்
ஆரம்ப நிலையில் நோய் இருந்தால் எவ்வித அறிகுறியும் நேரிடையாகத் தெரியாது. 40 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, 40 வயதினர் தங்கள் கண்களை வருடத்திற்கு ஒருமுறை கண்களை முறையாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
கண் நீர் அழுத்த நோயின் வகைகள்:
- ஒப்பன் ஆங்கிள் கண் நீர் அழுத்தம்
- கிளோஸ்டு ஆங்கிள் கண் நீர் அழுத்தம்
ஒப்பன் ஆங்கிள் கண் நீர் அழுத்தத்தில் ஓரிரு அறிகுறிகளே தோன்றும். பக்கப் பார்வையானது படிப்படியாகக் குறையும்.
கிளோஸ்டு ஆங்கிள் கண் நீர் அழுத்தத்தில் சில அறிகுறிகள் தோன்றும். கண்களில் வலி உண்டாகுதல், தலைவலி, கண் புருவத்தில் வலி, பார்க்கும்போது வண்ண வளையங்கள் / கரு வளையங்கள் தெரிவது
நோய் முற்றிய நிலையில் இரு வகைகளிலும் சில அறிகுறிகள் தெரியும். அவை:
- கடுமையான கண் வலி
- கண் சிவப்பாக இருத்தல்
- கண்களில் நீர் வடிதல்
- பார்வை மங்கலடைதல்
- பார்வையிழப்பு
உங்கள் பார்வையில் திடீரென ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தால், உடனடியாக கண் மருத்துவரை அணுகவும். கண் நீர் அழுத்தம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் பார்வையில் ஏன் மாற்றம் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனை அவசியம்.
நினைவில் கொள்ள வேண்டியவை:
நோய் முற்றினால் பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டால் இழந்த பார்வையை மீண்டும் பெற முடியாது. எனினும், ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்தால் பார்வையிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கண் மருத்துவரிடம் முறையான சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் பார்வையிழப்பைத் தற்காத்துக் கொள்ளலாம்.
குழந்தைப்பருவ கண் நீர் அழுத்தம்:
பிறந்த குழந்தைகளுக்குக்கூட கண் நீர் அழுத்தம் ஏற்படலாம். கண்புரை நோய் காரணமாக குழந்தைப் பருவத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கு கண் நீர் அழுத்தம் ஏற்படலாம்.
பொதுவான சில அறிகுறிகள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தைப்பருவ கண் நீர் அழுத்தம் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
- பெரிதாக உள்ள கருவிழி
- கண்களில் அதிகமாக நீர் வெளியேறுதல்
- குழந்தைகள், ஒளியைப் பார்க்காமல் தவிர்த்தல்
இந்த அறிகுறிகள் இருந்தால் கண் நீர் அழுத்தமாகத் தான் இருக்கும் என பயப்படத் தேவையில்லை. மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதை இந்த அறிகுறிகள் உணர்த்துகின்றன.
பெரிய குழந்தைகளுக்கு இது போல அறிகுறிகள் எதுவும் இருக்காது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
-
கண் நீர் அழுத்தம், பரம்பரை நோயா?
ஆம். கண் நீர் அழுத்தத்தால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களது குடும்பத்தினரும் குறிப்பாக இரத்த உறவு உள்ளவர்கள் கண்டிப்பாக விரிவான கண் நீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
-
எனது கருவிழியை ஏன் பரிசோதனை செய்ய வேண்டும்?
கருவிழி தடிமனாக இருந்தால்கூட கண்களில் உள்ள இயல்பான அழுத்தம் பாதிக்கப்படும். இதனால் சில மருத்துவர்கள் கருவிழியைப் பரிசோதிக்கின்றனர்.
-
உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்திற்கும் கண் அழுத்தத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. உயர் இரத்த அழுத்தம் இருந்தால் கண்களில் அழுத்தம் அதிகளவில் இருக்கும் என்பதில்லை. ஆனால் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கண் நீர் அழுத்தம் உண்டாகும் அபாயம் அதிகம் உள்ளது.
-
கண் நீர் அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எனது உணவுமுறையில் கட்டுப்பாடோ மாற்றமோ வேண்டுமா?
கண் நீர் அழுத்தத்திற்கும் உணவுமுறைக்கும் நேரடி தொடர்பு இல்லை.
-
கண் அழுத்தத்தின் இயல்பான அளவு என்ன?
12.2 – 20.6 mm Hg
-
கண் அழுத்தத்ததைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை கண்களைப் பரிசோதனை செய்வது மிக அவசியம்.
சிகிச்சை:
கண் நீர் அழுத்தத்தைக் குணப்படுத்த முடியாது. பார்வையிழப்பு ஏற்பட்டிருந்தால் அதை சிகிச்சையால் சரிசெய்து இழந்த பார்வையை மீட்க முடியாது. மேற்கொண்டு பார்வையிழப்பு ஏற்படாமல் இருக்க சிகிச்சை பயன்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் என இதனால்தான் அறிவுறுத்தப்படுகிறது. கண்களைப் பரிசோதித்த பிறகு கண் மருத்துவர், நோயின் தீவிரத்தைப் பொறுத்து பின்வரும் சிகிச்சை முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்.
- கண் சொட்டுமருந்து
- லேசர் சிகிச்சை
- அறுவை சிகிச்சை
நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு வாழ்நாள் முழுவதும் கண் நீர் அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகளைத் தவறாமல் பின்பற்றவும்.
சொட்டு மருந்து:
பெரும்பாலான நோயாளிகளுக்கு கண் சொட்டு மருந்துகளே சிகிச்சையாக அளிக்கப்படுகிறது. கண் அழுத்தத்தைக் குறைக்க, இவை பயன்படுகின்றன. சொட்டு மருந்துகளில் பல வகைகள் உள்ளன. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொட்டு மருந்துகள் வழங்கப்படும்.
எவ்வாறு செயல்படும்:
கண்களில் சுரக்கும் திரவத்தைக் குறைத்து கண் அழுத்தத்தை சொட்டு மருந்துகள் குறைக்கின்றன அல்லது கண்களிலிருந்து திரவம் வெளியேறும் துளைகளைமேம்படுத்துகின்றன/அதிகரிக்கின்றன. இதனால் கண்களிலிருந்து திரவம் இயல்பாக, சிக்கலின்றி வெளியேறும்.
பக்க விளைவுகள்:
சிலருக்கு கண்களில் எரிச்சல், வீக்கம், அரிப்பு போன்றவை ஏற்படும். வெகு சிலருக்கு இதயத்துடிப்பு, இயல்பைவிட அதிகமாக இருக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
எத்தனை நாட்கள் சிகிச்சையைத் தொடர வேண்டும்?
எதிர்காலத்தில் பார்வையிழப்பு ஏற்படாமல் இருக்க, வாழ்நாள் முழுவதும் கண் நீர் அழுத்தத்திற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் குறிப்பிட்டால் மட்டுமே மருந்துகளை நிறுத்த வேண்டும்.
-
2-3 வாரங்களுக்கு மருந்துகளை நான் பயன்படுத்தவில்லை என்றாலும் எனது பார்வையில் மாற்றம் இல்லை. ஏன் மருந்துகளைத் தொடர வேண்டும்?
கண் நீர் அழுத்த நோயால் பார்வை நரம்பானது படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். மருந்துகளை பயன்படுத்தவில்லை என்றாலும் பார்வையில் மாற்றங்கள் இருக்கும். அதை உங்களால் உணர முடியாமல் இருக்கலாம். மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமே பார்வை நரம்பையும் பார்வையையும் பாதுகாக்க முடியும்.
-
பல வருடங்களாக கண் நீர் அழுத்தத்திற்கு மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் பார்வையில் முன்னேற்றம் இல்லை. ஏன்?
பார்வை நரம்பு பாதிப்பால் பார்வையில் குறைபாடோ பாதிப்போ ஏற்பட்டால் இழந்த பார்வைத் திறனை மீண்டும் பெற முடியாது. மேற்கொண்டு பார்வை இழப்பு ஏற்படாமல் இருக்கவே மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
-
சொட்டு மருந்தால் பார்வையிழப்பை குணப்படுத்த முடியுமா?
இல்லை. கண் நீர் அழுத்தத்திற்கான சொட்டு மருந்துகளால் பார்வையிழப்பை குணப்படுத்த முடியாது. கண்களில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கவே சொட்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
-
எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கண் நீர் அழுத்தம் உள்ளது. எனது மருந்தை அவரும் பயன்படுத்த முடியுமா?
கூடாது. அவரை கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையே பயன்படுத்த வேண்டும்.
-
ஃபிரிட்ஜில் சொட்டு மருந்துகளை வைக்க வேண்டும் என மருந்துக் கடையில் கூறினார்கள். என்னிடம் ஃபிரிட்ஜ் இல்லை என்ன செய்வது?
சில சொட்டு மருந்துகளை குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையில் வைக்க வேண்டும். அதனால் அவ்வாறு கூறியிருப்பார்கள். உங்களிடம் ஃபிரிட்ஜ் இல்லை எனில் மருத்துவரிடம் தெரிவிக்கவும். மாற்று மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
-
மருத்துவர் பரிந்துரைத்த நேரங்களில் சொட்டு மருந்துகளைப் போட்டுக்கொள்ள மறந்துவிடுகிறேன். இதில் சிக்கல் உள்ளதா?
முடிந்தவரை மருத்துவர் குறிப்பிடும் நேரங்களில் சொட்டு மருந்துகளைப் போட்டுக் கொள்ளவும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அலுவலக நண்பர்களிடம் கூறி உங்களை நினைவுப்படுத்த சொல்லவும். நினைவூட்ட, உங்கள் அலைபேசியிலேயே அலாரம் வைத்துக்கொள்ளவும்.
லேசர் சிகிச்சை:
கண் நீர் அழுத்த நோய்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் குறுகிய கோண கண்நீர் அழுத்த நோய் ஒருவகை. இவர்களுக்கு லேசர் முறையில் சிகிச்சை அளிக்கப்படும். இதற்கு YAG LASER IRIDOTOMY என்று பெயர். லேசர் சிகிச்சையின்போது வலி தெரியாமலிருக்க சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து கொடுக்கப்படும். சிலருக்கு பல தடவை லேசர் சிகிச்சை செய்யும் தேவை இருக்கலாம். சிலருக்கு லேசர் சிகிச்சைக்கு பிறகும் சொட்டு மருந்துகள் போடும் தேவை இருக்கலாம்.
கண் நீர் அழுத்தம் தீவிரமாக உள்ள நோயாளிகளுக்கு கண் அழுத்தத்தைக் குறைக்கவும் நோயாளியின் வலியைக் குறைக்கவும் diode எனும் லேசர் சிகிச்சை செய்யப்படுகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
லேசர் சிகிச்சை என்றால் என்ன?
கண்களில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க, கண்களுக்குள் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்களை செலுத்தும் சிகிச்சையே லேசர்.
-
லேசர் சிகிச்சை செய்யப்படுவதன் நோக்கம் என்ன?
கண்ணிலிருந்து திரவம் வெளியேறும் பாதை அடைப்படிருந்தால் அதைத் திறப்பதற்கோ திரவம் வெளியேற புதிய பாதையை உருவாக்குவதற்கோ லேசர் சிகிச்சை செய்யப்படுகிறது.
-
லேசர் சிகிச்சை செய்துகொண்டால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
பாதிப்பு எதுவும் ஏற்படாது. லேசர் சிகிச்சை செய்தபிறகு சிறிது நேரத்திற்கு ஒளியைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படலாம். சிலருக்கு லேசான தலைவலி ஏற்படலாம்.
-
லேசர் சிகிச்சை செய்துகொள்ளாவிட்டால் என்ன நடக்கும்?
மருத்துவர் உங்களுக்கு லேசர் சிகிச்சையைப் பரிந்துரைத்திருந்தால் காலம் தாழ்த்தாமல் செய்து கொள்ளவும். இல்லையெனில் கண் அழுத்தம் அதிகரிக்கும், பார்வை முழுவதும் பாதிக்கப்படும்.
-
லேசர் சிகிச்சையை மீண்டும் தொடர வேண்டுமா?
ஆம். சில நோயாளிகளுக்கு ஒருமுறைக்கு மேல் லேசர் செய்யப்படும். திரவம் வெளியேறுவது இயல்பு நிலைக்கு மாறும்வரை லேசரைத் தொடர வேண்டும். அதனை மருத்துவர் கண்களைப் பரிசோதித்த பின்னர் தெரிவிப்பார்.
-
இரண்டு கண்களிலும் ஒரே நேரத்தில் லேசர் சிகிச்சையை செய்ய முடியுமா?
ஒரே அமர்வில் (same sitting) அடுத்தடுத்து லேசர் சிகிச்சை செய்யப்படும்.
-
லேசர் சிகிச்சைக்கு முன் கண்களில் ஏன் சொட்டு மருந்து போடப்படுகிறது?
லேசர் சிகிச்சைக்கு கண்களில் உள்ள பாவையைச் சிறிதாக்க வேண்டும். இதற்குதான் லேசருக்கு முன்னதாக சொட்டு மருந்து செலுத்தப்படுகிறது.
-
லேசர் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் தங்க வேண்டுமா?
தேவையில்லை. இந்த லேசர் சிகிச்சையானது வெளிநோயாளிகள் பிரிவிலேயே செய்யப்படும்.
-
லேசருக்கு பிறகு தலை குளிக்கலாமா?
இது, அறுவை சிகிச்சை அல்ல. எனவே, தலை குளிப்பதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.
அறுவை சிகிச்சை:
கண் நீர் அழுத்தம், மிகத் தீவிரமாக பாதித்துள்ள நோயாளிகளுக்கு, கண் நீர் அழுத்தமும் கண்புரையும் பாதித்துள்ள நோயாளிகளுக்கு, மருந்துகளால் எந்த பலனும் ஏற்படாத நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
கண் நீர் அழுத்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சொட்டுமருந்துகளைப் பயன்படுத்தலாமா?
கூடாது. அறுவை சிகிச்சைக்கு பிறகு சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது. மறு பரிசோதனையின்போது மருத்துவர் இதைப் பற்றி தெளிவாக எடுத்துரைப்பார்.
-
அறுவை சிகிச்சையால் இழந்த பார்வையை மீட்க முடியுமா?
முடியாது. கண் நீர் அழுத்தத்தால் இழந்த பார்வையை மீட்க முடியாது. மேற்கொண்டு பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்கவே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
-
அறுவை சிகிச்சைக்கு பிறகு எத்தனை நாட்கள் ஓய்வெடுக்க (bedrest) வேண்டும்?
பொதுவாக, அறுவை சிகிச்சைக்கு பிறகு 15 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
-
அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏதேனும் சிக்கல் ஏற்படுமா?
அறுவை சிகிச்சையின்போது தையல் போடப்படும். இதனால் கண்களில் எரிச்சல் ஏற்படலாம். எனினும், இந்தத் தையல்கள் சில நாட்களில் அகற்றப்படும். பிறகு, எரிச்சல் இருக்காது.
-
அறுவை சிகிச்சைக்கு பிறகு எத்தனை முறை மறுபரிசோதனைக்கு வரவேண்டும்?
தையலை அகற்றவும், தேவைப்பட்டால் கண்களில் மருந்து செலுத்தவும் மூன்று மாதங்களில் குறைந்தது 4-6 முறை மறுபரிசோதனைக்கு வரவேண்டும்.
-
அறுவை சிகிச்சைக்கு பிறகு எத்தனை நாட்களில் வாகனம் ஓட்டலாம்?
ஒருமாதத்திற்கு பிறகு, மருத்துவர் உங்கள் கண்களின் நிலையைப் பரிசோதித்த பிறகு வாகனம் ஓட்டலாம்.