நமது விழியானது மூன்று அடுக்குகளைக் கொண்டது. விழியின் வெளிப்புறத்தில் ஸ்கிளீரா (Sclera) எனும் அடுக்கு உள்ளது. உட்புறத்தில் ரெடினா எனும் அடுக்கு உள்ளது. இந்த இரண்டு அடுக்குகளுக்கு இடையே யூவியா எனும் அடுக்கு உள்ளது. இப்பகுதி வீக்கமடைவதால் ஏற்படும் நோயே யூவியைட்டீஸ் எனப்படுகிறது. யூவியா வீக்கமடைவதால் கண்களில் வலி, கண்சிவப்பு அல்லது மங்கலான பார்வை ஆகியவை உண்டாகக்கூடும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் நிரந்தர பார்வையிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
காரணங்கள்:
யூவியைட்டீஸ் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
  • Tuberculosis, M.Leprae அல்லது syphilis போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படும்.
  • வைரஸினால் ஏற்படும் தொற்றுகளால் உண்டாகும்.
  • ஒட்டுண்ணியால் ஏற்படும் தொற்றுகளால் ஏற்படும்.
  • கண்ணில் அடிபடுவதால் ஏற்படுகிறது.
யூவியைட்டீஸ் தோன்றுவதற்கான காரணங்கள், சில வேளைகளில் கண்டறிய முடியாதபடி உள்ளன.
அறிகுறிகள்:
  • வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண்ணில் அதிக கூச்சம் ஏற்படுதல்
  • மங்கலான பார்வை
  • கண் வலி
  • கண்சிவப்பு
  • கண்ணில் பூச்சி பறப்பது போல் உணர்தல்
சிகிச்சை:
நோய்த் தொற்றுகளால்தான் யூவியைட்டீஸ் பெரும்பாலும் ஏற்படுகிறது. இந்தத் தொற்றுகள், உங்கள் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கலாம். கண் மருத்துவரால் உங்களது கண்களை மட்டுமே குணப்படுத்த முடியும். உடலின் மற்ற பகுதிகளில் நோயைக் கட்டுப்படுத்த பிற சிகிச்சை முறைகள் அவசியமாகிறது.
சிகிச்சையின் முக்கிய நோக்கம்:
  • வலியை குணப்படுத்துதல்
  • பார்வையிழப்பைத் தடுத்தல்
  • யூவியைட்டீஸை உண்டாக்கும் நோய்த்தொற்று அல்லது நோயைக் குணப்படுத்துதல்
நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்தே முன்னேற்றமானது அமையும். யூவியைட்டீஸ் நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாதெனினும் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். யூவியைட்டீஸ் நோய்க்கான சிகிச்சை முறைகளில் மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. தற்போதைய சிகிச்சை முறைகளின் மூலம் உங்கள் பார்வைத் திறனைப் பாதுகாக்க முடியும். சிகிச்சையை விரைவாகத் தொடங்குவதன் மூலம் பார்வைத் திறனைப் பாதுகாக்க முடியும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
எனது கண்ணில் ஒவ்வாமை அல்லது நோய்த் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சில காரணங்களை கூற முடியும். உங்கள் கண்ணில் பலத்த அடிபட்டிருக்கக்கூடும். உங்கள் உடலில் பாக்டீரியாவால் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும். சிலருக்கு எந்தவொரு தெளிவான காரணமும் இன்றி ஒவ்வாமை ஏற்படக்கூடும்.
எனக்கு காசநோய் (TB) இருந்தால், எனது கண்களும் பாதிக்கப்படுமா?
உங்களுக்கு காசநோய் இருந்தால், உங்கள் கண்களும் பாதிக்கப்படக்கூடும். உங்களுக்கு காசநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய, மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே அல்லது CT ஸ்கேன் போன்ற சில பரிசோதனைகளை மேற்கொள்ளவும்.
காசநோய்க்கான (TB) மருந்துகளை நான் எடுத்துக்கொண்டாலும் எனக்கு மீண்டும் TB நோய்த்தொற்று ஏற்படுமா?
காசநோய்க்கான சிகிச்சையை நீங்கள் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை தொடர்ந்து எடுக்க வேண்டும். தொடர்ந்து மாத்திரைகளை உட்கொண்டால் உங்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாது.
நான் கர்ப்பமாக இருக்கும்போதோ குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போதோ காசநோய்க்கான மாத்திரைகளையோ Immunosuppressive எனும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மாத்திரைகளையோ எடுத்துக் கொள்ளலாமா?
அவற்றை நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது
யூவியைட்டீஸ் நோயிலிருந்து விடுபட அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமா?
பொதுவாக, யூவியைட்டீஸ் நோயானது கண் சொட்டு மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டாலே போதும். எனினும் வெகு சில வேளைகளில் மட்டும் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றன.
சொட்டு மருந்துகளை நான் பயன்படுத்தினால், எனது கண்கள் குணமடையுமா? தொடர்ந்து சொட்டு மருந்துகளைப் போட்டு கொள்ள வேண்டுமா?
சில நோயாளிகளுக்கு சொட்டு மருந்துகளை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது. மற்றவர்கள், சொட்டு மருந்துடன் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால் நோயைக் கட்டுப்படுத்த முடியும். முறையான சிகிச்சை எடுத்துகொண்டால் நோய்த்தொற்றைத் தடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனையையும் அறிவுரையையும் எப்போதும் பின்பற்றவும்.
ஸ்டிராய்டு மாத்திரைகளை எடுத்துகொள்ளும்போது தனிப்பட்ட உணவுமுறையைப் (Diet) பின்பற்ற வேண்டுமா?
மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது எந்த தனிப்பட்ட உணவுமுறையையும் பின்பற்ற தேவையில்லை. எனினும் ஸ்டிராய்டு மருந்துகளை உட்கொள்ள தொடங்கிய நாளிலிருந்து உங்கள் உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
பிற நோய்களுக்கு இதுவரை நான் எடுத்துவரும் மருந்துகளை யூவியைட்டீஸ் நோய்க்கான சிகிச்சையைத் தொடங்கிய பின்னரும் தொடரலாமா?
கண் மருத்துவரிடம் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரத்தைத் தெரிவிக்கவும். கண் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உங்கள் மருந்துகளைத் தொடரலாம். Back to English version