அறிமுகம்:
மாறுகண் எனும் நிலையில் இரண்டு கண்களும் வெவ்வேறு திசைகளைப் பார்க்கும். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் இந்தக் குறைபாடு ஏற்படும். ஒரு கண் நேராகப் பார்க்கும்போது மற்றொரு கண்ணானது திரும்பிய நிலையிலோ மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ இருக்கும். சிலருக்கு இது எப்போதும் ஏற்படும். ஒரு சிலருக்கு அவ்வபோது ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தாவிட்டால், அந்தக் கண் சோம்பேறி கண்ணாகும் அபாயமும் பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது. இளம் வயதிலேயே மாறுகண் குறைபாட்டிற்கு சிகிச்சை எடுத்துகொண்டால் பார்வையிழப்பைத் தடுக்கலாம். மாறுகண், அதிர்ஷ்டம் என்று சிலர் தவறான எண்ணம் கொண்டுள்ளனர். மாறுகண் என்பது பார்வையிழப்பை உருவாக்கும் குறைபாடு என்பதை அனைவரும் உணர வேண்டும்.காரணங்கள்:
- குடும்பத்தில் யாருக்கேனும் மாறுகண், பார்வைத் திறன் குறைபாடு (Refractive Errors) இருத்தல்
- பலவீனமான கண் தசைகள்
- கண்புரை, கண் நீர் அழுத்தம், பார்வைத் திறன் குறைபாடு காரணமாக மங்கலான பார்வை ஏற்படுதல்
- கண்ணில் அடிபடுதல்
- கண் நரம்பில் ஏற்படும் சிக்கல்கள்
- காரணமேயின்றிக்கூட (Idiopathic) ஏற்படலாம்
அறிகுறிகள்:
- வெவ்வேறு திசைகளை கண்கள் பார்த்தல்
- ஒரு அல்லது இரண்டு கண்களிலும் மோசமான பார்வை
- பிரகாசமான ஒளியைப் பார்க்கும்போது ஒரு கண்ணை மூடிக்கொள்ளுதல்
- சில நேரங்களில் தலையை சாய்த்தபடி பார்த்தல்
- இரட்டைப் பார்வை
சிகிச்சை முறைகள்:
- கண்ணாடி அணிதல்
- கண் பயிற்சிகள்
- இயல்பான கண்ணை மறைக்கும் சிகிச்சை (Patch Therapy)
- அறுவை சிகிச்சை
கண்ணாடி அணிதல்:
சரிசெய்யப்படாத பார்வைத் திறன் குறைபாடுகளால் மாறுகண் ஏற்பட்டால் கண்ணாடி அணிய வேண்டிய தேவை ஏற்படும்.கண் பயிற்சிகள்:
சிறிய அளவில் மாறுகண் இருந்தால், சில கண் பயிற்சிகள் மூலம் கண்களைச் சுற்றியுள்ள தசைகளை வலிமையாக்க முடியும்.இயல்பான கண்ணை மறைக்கும் சிகிச்சை (Patch Therapy):
இரண்டு கண்களிலும் சமமான பார்வையை ஏற்படுத்தவும் கண்களின் அசைவுகளை மேம்படுத்தவும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது; சோம்பேறிக் கண் எனும் குறைபாடு தோன்றாமல் தடுக்கிறது.மாறுகண்ணுக்கான அறுவை சிகிச்சை:
கண்களை நேர்ப்படுத்த, அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் இரண்டு கண்களாலும் ஒரே திசையைப் பார்க்கும். ஆரம்ப நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டால் பைனாகுலர் விஷன் எனும் பார்வை குறைபாட்டைத் தவிர்க்கலாம். அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் பார்வை பாதிக்கப்படாது.அறுவை சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டியவை:
- அறுவை சிகிச்சைக்கு முன் சில கண் பரிசோதனைகளை செய்தாக வேண்டும்.
- ஜூரம், ஜலதோஷம், இருமல் முதலிய நோய்கள் குழந்தைகளுக்கு இருந்தால் அவை குணமான பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்.
- அறுவை சிகிச்சைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக உணவருந்தவோ குடிக்கவோ கூடாது.
அறுவை சிகிச்சையின்போது பின்பற்றப்படும் நடைமுறைகள்:
ஒரு மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு முன்னதாக மயக்க மருந்து கொடுக்கப்படும். இதனால் வலியால் அங்கிங்கு நகர மாட்டார்கள். எனவே, குழந்தைகள் உறங்கி விடுவார்கள். கண்ணின் வெள்ளை நிறப் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்படும்.- கண் தசைகள் இருக்கும் இடத்திலிருந்து முதலில் அவை அகற்றப்படும்.
- புதிய இடத்தில் தசைகள் மாற்றி அமைக்கப்படும். இதனால் ஒரே திசையை இரண்டு கண்களாலும் பார்க்க முடியும்.
- தசைகள், நிலையாக இருப்பதற்கு சிறு தையல்கள் போடப்படும். அறுவை சிகிச்சைக்கு பிறகு உங்களால் அதைப் பார்க்க முடியாது. சில நாட்களில் தழும்பு/தையல் குறிகள் மறைந்துவிடும்.
அறுவை சிகிச்சைக்குப் பின்:
பெரும்பாலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓரிரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கினால் போதும். வீட்டுக்கு சென்ற பிறகு, கூடுதல் சிகிச்சை தேவைப்படலாம். உதாரணத்திற்கு, சில குழந்தைகளுக்கு இயல்பான கண்ணை மறைக்கும் சிகிச்சை (Patch Therapy) தேவைப்படலாம். சிலருக்கு கண் பயிற்சி தேவைப்படலாம். சிலருக்கு கண்ணாடி தேவைப்படலாம்.அபாயக் காரணிகள்:
கண்ணைக் கட்டும் (Patch Therapy) சிகிச்சை, கண் பயிற்சி மற்றும் கண்ணாடி ஆகிய சிகிச்சைகளால் எவ்வித அபாயமும் இல்லை. அறுவை சிகிச்சையால் மிகக் குறைந்த பக்க விளைவுகள் ஏற்படலாம். அவை:- நோய்த் தொற்று,
- இரட்டைப் பார்வை,
- சிலருக்கு மற்றொரு முறை அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
மாறுகண்ணிற்கான அறுவை சிகிச்சைக்கு பிறகு பார்வை மேம்படுமா?
இல்லை. கண்ணின் அமைப்புதான் அறுவை சிகிச்சையின்போது மாற்றியமைக்கப்படும். பார்வையை மேம்படுத்த கண்ணாடி, கண் பயிற்சி மற்றும் கண்ணைக் கட்டும் பயிற்சி கூடுதலாகத் தேவை -
முதல் அறுவை சிகிச்சையிலேயே கண்கள் சரியாகப் பொருந்திவிடுமா?
80%-90% நோயாளிகளுக்கு முதல் அறுவை சிகிச்சையிலேயே கண்கள் சரியாகப் பொருந்தி விடும்.
-
மறுமுறை அறுவை சிகிச்சை தேவைப்படுமா?
மாறுகண்ணின் அளவு பெரியதாக இருந்தாலோ சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாறுகண் தோன்றினாலோ மறுமுறை அறுவை சிகிச்சை தேவைப்படும்.
-
இளம் வயதிலேயே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டுமா? குழந்தை வளரும்வரை காத்திருக்க வேண்டுமா?
இளம் வயதிலேயே அறுவை சிகிச்சை செய்துகொண்டால் கண்கள் நேர்ப்படுத்தப்படுவதுடன் இரண்டு கண்களும் ஒரே திசையைப் பார்க்கும். சோம்பேறிக் கண், பைனாகுலர் விஷன் எனும் பார்வை குறைபாடுகள் தவிர்க்கப்படும்.
-
அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு கண்ணாடி தேவைப்படுமா?
ஆம். அறுவை சிகிச்சை மூலம் பார்வை மேம்படாது. குழந்தைக்கு பார்வைத் திறன் குறைபாடு (Refractive Errors) இருந்தால் அதற்கு கண்ணாடி அணிய வேண்டும்.
-
ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா அல்லது இரண்டு கண்களிலுமா?
மாறுகண்ணின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்தும் பாதிக்கப்பட்டுள்ள கண் தசைகளைப் பொறுத்தும் இது மாறுபடும். சிலருக்கு ஒரு கண்ணில் தேவைப்படலாம். சிலருக்கு இரு கண்ணிலும் தேவைப்படலாம்.
Back to English Version