அறிமுகம்:
சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது அவர்களது கண்களில் உள்ள விழித்திரை பாதிக்கப்படுவதுடன் அதில் உள்ள இரத்த நாளங்கள் பலவீனமாகும். ஆரம்பத்தில், எவ்வித அறிகுறியும் இருக்காது. முறையான சிகிச்சை எடுத்து கொள்ளாவிட்டால் நாளடைவில் பார்வையிழப்பு உண்டாகும். ஆரம்ப நிலைகளில் இந்த நோயைக் குணப்படுத்த முடியும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், கண் மருத்துவரை வருடத்திற்கு ஒருமுறை சந்தித்து கண்களைப் பரிசோதனை செய்து கொள்ளவும். சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பால் பார்வையிழப்பு உண்டாக இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.- Diabetic Macular Edema: விழித்திரையின் இரத்த நாளங்கள் பலவீனமாக இருக்கும்போது, திரவம் வடியத் தொடங்கும். இந்த திரவம், விழித்திரையில் படிந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, பார்வையிழப்பு ஏற்படும்.
- Proliferative Diabetic Retinopathy: விழித்திரையில் புதிய இரத்த நாளங்கள் வளரும். இவை, பலவீனமாக இருப்பதுடன் விரைவில் உடைந்தும் விடும். இதனால் திரவம் வடியத் தொடங்கி, திடீரென பார்வையிழப்பு உண்டாகும்.
அபாயக் காரணிகள்:
- Type 1 அல்லது Type 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் நோயாளிகள்
- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
- கொழுப்பு உள்ளவர்கள்
- கர்ப்பிணிகள்
நினைவில் கொள்ள வேண்டியவை:
சர்க்கரை நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது சர்க்கரை நோயாளிகளுக்கு கண்கள் பாதிப்படையும் அபாயம் இருமடங்கு அதிகம்.- சர்க்கரை நோயாளிகள், வருடத்திற்கு ஒருமுறை கண்களைக் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.
- ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம்.
அறிகுறிகள்:
ஆரம்ப நிலையில் எவ்வித அறிகுறியும் இருக்காது. சர்க்கரை நோயாளிகள், கண்களைப் பரிசோதிக்கும்போதுதான் கண்டறிய முடியும். அடுத்தடுத்த நிலைகளில் பின்வருபவற்றை உணர முடியும்:- படிப்படியான பார்வையிழப்பு
- திடீர் பார்வையிழப்பு
- மங்கலான பார்வை
- கண் வலி அல்லது கண் சிவப்பாக இருத்தல்
சிகிச்சை:
மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன. அவை- விட்ரிக்டமி அறுவை சிகிச்சை
- லேசர் சிகிச்சை
- விழித்திரையில் செலுத்தப்படும் ஊசி.
விட்ரிக்டமி அறுவை சிகிச்சை:
விழித்திரை நோய்களை குணப்படுத்த, விட்ரிக்டமி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கண்ணின் பின்புறத்தில் விடரஸ் (vitreous) எனும் ஜெல்லி போன்ற திரவம் இருக்கும். காற்று, பலூனுக்கு வடிவம் தருவது போல இந்த விடரஸ், கருவிழிக்கு வடிவம் தரும். ஆனால் சில நோய்களுக்கு இது மேகமூட்டம் போலவோ விழித்திரையை இழுப்பது போலவோ இருக்கும். இதுபோன்ற நிலைகளில் விடரஸ் மாற்றப்பட வேண்டும். விட்ரிக்டமி என்பது இந்த திரவத்தை அகற்றவோ மாற்றவோ பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை.எந்தெந்த நிலைகளுக்கு விட்ரிக்டமி அறுவை சிகிச்சை செய்யப்படும்?
- விடரஸ் வீக்கம்
- கண்ணில் தீவிர காயம் ஏற்படுதல்
- நீரிழிவால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு
- விழித்திரை பிரிதல்
- குறைமாத குழந்தைக்கு ஏற்படும் விழித்திரை நோய்
விட்ரிக்டமி பற்றிய விவரங்கள்:
இந்த அறுவை சிகிச்சைக்கு 1-2 மணி நேரங்கள் ஆகும்- கண்ணை மறத்துப்போக செய்ய ஊசி போடப்படும்.
- விடரஸ் அகற்றப்படும்.
- உப்பு கரைசல், வாயு (Gas) அல்லது சிலிக்கான் எண்ணெய் கொண்டு விடரஸ் உடனடியாக மாற்றப்படும்.
- காயத்தை மூட, சிறிய தையல்கள் போடப்படும்..
அறுவை சிகிச்சைக்கு முன்:
- முழுமையான உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- அறுவை சிகிச்சை மருத்துவரிடம் உங்கள் கண்ணைப் பரிசோதிக்க வேண்டும். விடரஸின் நிலையைப் பொறுத்து எந்த வகை மயக்க மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வார்.
- அறுவை சிகிச்சை செய்யும் அன்று, இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கும் நிலை ஏற்படும். அதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு:
- மருத்துவர் அறிவுரையின்படி சொட்டு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
- சில நாள்களுக்கு கடினமான பணிகளைச் செய்யக்கூடாது.
- அறுவை சிகிச்சை செய்துகொண்ட சில நாள்களுக்கு கனமான பொருட்கள் எதையும் தூக்க வேண்டாம்.
வாயு (Gas) செலுத்தப்பட்ட நோயாளிகள் பின்பற்ற வேண்டியவை:
- 15 நாட்களுக்கு குப்புறப் நிலையில் படுக்க வேண்டும்.
- குப்புறப் நிலையில் தலையை வைத்து உட்கார வேண்டும்.
- 45 நாட்களுக்கு விமானத்தில் பறக்க வேண்டாம். உயரமாக பறக்கும்போது கண்ணின் அழுத்தம் அபாயகரமான அளவு அதிகரிக்கும். பேருந்து அல்லது ரயில் போக்குவரத்தை மேற்கொள்ளவும்.
லேசர் சிகிச்சை (Photocoagulation)
லேசர் சிகிச்சையின்போது, கசிவை ஏற்படுத்தும் இரத்த நாளங்களை அடைக்க லேசர் பயன்படுத்தப்படும். பின்வரும் விழித்திரை நோய்களுக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்படும்.- சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய்
- குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் விழித்திரை நோய்
- Macular degeneration
- விழித்திரை நரம்பு அடைத்தல்
சிகிச்சை பற்றி:
பெரும்பாலான விழித்திரை குறைபாடுகள் உள்ள கண்களில் வழக்கத்திற்கு மாறான அல்லது சேதமடைந்த இரத்த நாளங்கள் இருக்கும். இந்த நாளங்களிலிருந்து சுற்றியுள்ள பகுதிகளில் இரத்தம் கசியும். இதனால் படிப்படியாக பார்வை குறையும். லேசர் சிகிச்சையின்போது அதிக சக்தியுள்ள ஒளிக்கதிர்கள் உள்ளே செலுத்தப்பட்டு நுண்குழாய்களை அடைத்து விடும். இரத்தக் குழாய்களை மூடி விட்டால் உங்களது இழந்த பார்வையை மீட்க முடியாமல் போகலாம். ஆனால் நுண்குழாய்களிலிருந்து மேற்கொண்டு இரத்தம் கசியாமல் இருக்கும். இதனால் விழித்திரை நிலை இன்னும் மோசமடையாமல் தடுக்கப்படும்.சிகிச்சையின்போது:
- மயக்க மருந்து கொடுக்கப்படும்; உங்கள் கண்கள் மறத்துபோகும். மயக்க மருந்து கொடுக்கப்பட்டு லேசர் சிகிச்சை செய்யப்படுவதால் வலி தெரியாது.
- கண்களின் பாப்பாவை விரிவடையச் செய்ய, சொட்டு மருந்து போடப்படும்
- கண் இமைகளைத் திறந்த நிலையில் வைத்திருக்க, காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தப்படும்.
- லேசர் ஒளிக்கதிர்கள், விழித்திரையின் மீது செலுத்தப்படும்.
- முழு நடைமுறைக்கும் 20-40 நிமிடங்கள் ஆகும். எனவே மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்காது. சிலருக்கு மீண்டும் ஒருமுறை லேசர் சிகிச்சை செய்யும் தேவை இருக்கக்கூடும்.
பக்க விளைவுகள்:
- லேசர் சிகிச்சைக்கு பிறகு சில நோயாளிகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆனால், சில மணி நேரங்களுக்கு மட்டுமே அவை இருக்கும்.
- மங்கலான பார்வை. சொட்டு மருந்து போடப்பட்டதால் மங்கலான பார்வை இருக்கலாம். இது இயல்பானதுதான்.
- ஒளியைப் பார்த்தால் கண் கூசுதல். கருப்பு கண்ணாடி அணிந்து கொள்ளலாம்/
- வலி அல்லது அசௌகரியமாக உணர்தல்
- சிகிச்சைக்கு பிறகு வெளியூர் நோயாளிகள் தனியாக பேருந்திலோ ரயிலிலோ பயணம் செய்யக்கூடாது. உள்ளூர் நோயாளிகள் தனியாக வாகனம் ஒட்டி செல்லக்கூடாது.
அபாயங்கள் மற்றும் சிக்கல்கள்:
சிக்கல்கள் மிக அரிதாக ஏற்படும்.- இரவில் பார்வை குறையும்.
- பக்கவாட்டு பார்வை ஓரளவுக்கு இருக்கும்.
- கண்களில் இரத்தம் வழிதல்
- பார்க்கும்போது பூச்சி பறப்பது போல் உணர்தல்
- கண்களில் பின்புறம் செலுத்தப்பட்ட லேசரின் பாதைகளை உணர்தல். இது சில வாரங்களில் மறைந்துவிடும்.
- உங்கள் பார்வையின் நடுப்பகுதியில் சிறிய புள்ளி (blind spot) தோன்றும். இதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
விழித்திரை ஊசி (Intravitreal Injections)
விழித்திரை ஊசி எனப்படுவது கண்களுக்குள் செலுத்தப்படும் ஊசி. வீக்கத்தைக் குறைப்பதற்காகவும் சிறிய இரத்த நாளங்கள் புதிதாக உருவாகுவதையும் தடுக்கும்.யாருக்கு விழித்திரை ஊசி செலுத்தப்படும்?
- Macular degeneration
- சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய்
- விழித்திரை நரம்வு அடைத்தல்
எவ்வாறு இது செயல்படும்?
Anti-VEGF எனப்படும் மருந்துகள் கண்ணுக்குள் செலுத்தப்படும்போது புதிய இரத்த நாளங்கள் வளர்வது தடுக்கப்படும். இந்த இரத்த நாளங்கள் அபாயகரமானவை. ஏனெனில் அவை இயல்புக்கு மாறாக வளரும். இந்த நாளங்களால் கண்களுக்குள் இரத்தக் கசிவு ஏற்படும். Anti-VEGF மருந்துகள் இதைக் கட்டுப்படுத்தும். Anti-VEGF மருந்துகளால் பலன் இல்லையெனில் சில நோயாளிகளுக்கு ஸ்டிராய்டு மருந்துகள் செலுத்தப்படும்.ஊசி செலுத்தப்படும்போது:
- கண்களின் பாப்பாவை விரிவடையச் செய்ய, சொட்டு மருந்து போடப்படும்
- கண்களை மறத்துபோகச் செய்ய, மயக்க மருந்து கொடுக்கப்படும்.
- கண்கள் சுத்தம் செய்யப்படும். நோய்த் தொற்றைத் தவிர்க்க, கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்படும். பாதுகாப்பிற்காக முகத்தின் மற்றப் பகுதிகள் மூடப்படும்.
- சிகிச்சையின்போது கண்ணைத் திறந்த நிலையில் வைக்க, பிரத்யேக சாதனம் பயன்படுத்தப்படும்.
- Anti-VEGF அல்லது ஸ்டிராய்டு மருந்துகள் போடப்படும்.
- நோய் எதிர்ப்புக்கான சொட்டு மருந்துகள் போடப்படும்.
பக்க விளைவுகள் மற்றும் அபாயங்கள்:
விழித்திரை ஊசிகள், மிகவும் பாதுகாப்பானது. சில விழித்திரை நோய்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பதில் ஊசி செலுத்தப்படும். பக்க விளைவுகள் மிகவும் அரிதாக ஏற்படும். அவை:- கண்ணில் உறுத்தல்
- இரத்தம் கசிதல்
- பார்க்கும்போது கண்ணில் பூச்சி பறப்பது போல உணர்தல்
- கண்களில் அழுத்தம் அதிகரித்தல்
- நோய்த்தொற்று
- இதய நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ள வெகு சிலருக்கு இரத்த நாளங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
சர்க்கரை நோய் காரணமாக எனது விழித்திரை பாதிக்கப்படத் தொடங்கியுள்ளதாக மருத்துவர் கூறினார். எவ்வாறு அதைக் குணப்படுத்துவது?
இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் உங்கள் விழித்திரை மேலும் பாதிப்படையாமல் தடுக்கலாம். ஆனால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட விழித்திரையை மீட்க முடியாது. மேலும் பாதிப்படையாமல் தடுப்பதன் மூலம் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம். எனவே இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதால் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
-
ஒரு வருடமாக எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. எனது கண்கள் பாதிக்கப்படுமா?
அதைத் தற்போது தெளிவாகக் கூறமுடியாது. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும். வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
-
சர்க்கரை நோயால் வரும் விழித்திரை பாதிப்பிலிருந்து எவ்வாறு என்னை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்?
உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உங்களது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிரால் அளவைக் கட்டாயம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பொது மருத்துவரிடம் உடல் பரிசோதனையும் கண் மருத்துவரிடம் கண் பரிசோதனையும் செய்து கொள்வது நல்லது.
-
எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. எனது கண்களை எவ்வாறு நான் பாதுகாத்துக் கொள்வது?
சர்க்கரை நோயால் ஏற்படும் கண் நோய்களைக் கட்டுப்படுத்த சிறந்த வழி யாதெனில், ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டறிந்து சிகிச்சை பெறத் தொடங்குவதுதான். சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் கண்களின் நிலை அபாயகரமானதுதான். ஒவ்வொரு வருடமும் தவறாமல் கண்களைப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் கண்களின் நிலையை அறிந்து அதற்கேற்ற வகையில் கண்களைப் பாதுகாக்க வேண்டும்.
-
சர்க்கரை நோய் காரணமாக கண்களுக்குள் இரத்தம் வடியுமா?
ஆம். இவ்வாறு ஏற்பட்டால் சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோயின் அறிகுறி என உணரலாம். ஆரம்ப நிலைகளில் மிகக் குறைவாகவே இரத்தம் வடியும். அடுத்தடுத்த நிலைகளில் புதிய இரத்த நாளங்கள் விழித்திரையில் வளரும். இந்த இரத்த நாளங்கள் பலவீனமாக இருப்பதால் அவற்றிலிருந்தும் இரத்தம் வடியும். இதனால் மேகம் மறைத்தது போல பார்வை இருக்கும்.
-
சர்க்கரை நோயால் எனது கண்கள் எவ்வாறு பாதிப்படையும்?
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், உங்கள் உடலானது சர்க்கரையை முறையாகப் பயன்படுத்தாது; சேமித்தும் வைக்காது. விழித்திரை என்பது மிக மெல்லிய திசு. பார்க்கும் பொருட்கள் பற்றிய தகவலை மூளைக்கு அனுப்பி, நாம் எதைப் பார்க்கிறோம் என்பதை நமக்கு உணர்த்த உதவுகிறது. சர்க்கரையின் பயன்பாடு உடலில் சரிவர இயங்கவில்லை எனில் விழித்திரையில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் பாதிக்கப்படும். இந்த இரத்த நாளங்கள் தீவிரமாகப் பாதிக்கப்பட்டால் பார்வை கடுமையாகப் பாதிக்கப்படும்.
-
விழித்திரைப் பிரிதலுக்காக விட்ரிக்டமி அறுவை சிகிச்சை செய்துகொண்டால், எனது பார்வை முழுமையாகத் திரும்ப கிடைக்குமா?
அது நோயின் தீவிரத்தைப் பொறுத்துதான். விழித்திரையின் நடுப்பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலோ நோய் முற்றிய நிலையில் சிகிச்சை செய்துகொண்டாலோ முழுமையான பார்வைக்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் உங்கள் பார்வை படிப்படியாக முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
-
எனது கண்ணில் சிலிக்கான் எண்ணெய் பொருத்தப்பட்டால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும்?
வெகு சில நோயாளிகளுக்கு இரட்டை பார்வை ஏற்படும். எண்ணெய் அகற்றப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை முடிந்து 3-4 மாதங்களுக்கு பிறகு) இந்த நிலை சீராகி விடும்.
-
கண்ணில் சிலிக்கான் எண்ணெய் அகற்றப்படாமல் இருந்தால் என்ன நேரிடும்?
கண்புரை உருவாகுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. கண்ணில் அழுத்தமும் அதிகரிக்கும். நரம்பு பாதிப்பு மற்றும் கண் வலி ஆகியவை உண்டாகும்.
-
சிலிக்கான் எண்ணெய்க்கு பதிலாக வாயு (Gas) வைத்துக்கொள்ளலாமா? சிலிக்கான் எண்ணெய் வைத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. அதை அகற்ற மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.
அறுவை சிகிச்சை செய்யும்போதுதாம் அதனைக் கண்டறிய முடியும். கண்ணின் நிலையைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். உங்களுக்கு கண்களுக்கு பொருந்தக்கூடிய முறையைத் தேர்ந்தெடுப்பதுதான் உங்கள் உடல்நலனுக்கு முக்கியமானது.
-
அறுவை சிகிச்சை எனக்கு பரிந்துரைக்கப்பட்டு, அதை செய்துகொள்ள மறுத்தால் என்ன ஆகும்?
விழித்திரை பிரிதல் தீவிரமடையும். விழித்திரை மிகவும் பாதிக்கப்பட்டு, உங்கள் பார்வை முழுமையாக பறிபோகும். கண் புரை ஏற்படும் அபாயமும் அதிகம். உங்களுக்கு யூவியா அல்லது கண் நீர் அழுத்த நோய் இருந்தால், கண் வலி ஏற்படும்; கண் மேலும் சுருங்கும். உங்கள் பார்வையை மேம்படுத்த, அறுவை சிகிச்சை உதவக்கூடும்.
-
எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும்?
அறுவை சிகிச்சைக்கு பிறகு 2-3 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும்.
-
எத்தனை நாளைக்கு ஒரு பக்கமாகவும் குப்பறப் படுத்த நிலையிலும் தூங்க வேண்டும்?
7-15 நாட்களுக்கு -
அறுவை சிகிச்சைக்கு பிறகு recovery area எனும் தனியறையில் எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்?
அறுவை சிகிச்சையின் நேரம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அரவிந்தில் பொதுவாக நோயாளிகள் 1-3 மணி நேரங்கள் வைக்கப்படுவார்கள்.
-
லேசர் சிகிச்சைக்கு பிறகு முழுமையான பார்வை கிடைக்குமா?
சர்க்கரை நோயால் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்படும் லேசர் சிகிச்சையால் நோய் தீவிரமைடையாமல் தடுக்கவே செய்யப்படுகிறது. சிலருக்கு, பார்வை சற்று மேம்படலாம். சர்க்கரை நோயால் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பார்வையை மீண்டும் பெறமுடியாது. மேற்கொண்டு பார்வை இழக்காமல் இருப்பதற்கும் பார்வையிழப்பு ஏற்படாமல் இருப்பதற்கும் லேசர் சிகிச்சை செய்யப்படுகிறது. -
பலமுறை லேசர் சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமா?
உங்கள் கண்கள் எவ்வாறு லேசரை எதிர்கொள்கிறது என்பதை முதல் லேசர் சிகிச்சைக்கு பிறகு கண்களைப் பரிசோதனை செய்தே இதை அறிய முடியும். விழித்திரை சிக்கல்கள் மீண்டும் ஏற்பட்டால் மற்றுமொரு முறை லேசர் செய்யப்பட வேண்டும்.
-
பொதுவாக, லேசர் சிகிச்சைக்கு பிறகு பக்க விளைவுகள் தோன்றுமா?
லேசர் சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது. பக்க விளைவுகளும் சிக்கல்களும் மிக மிக அரிதாகவே தோன்றும். -
லேசர் சிகிச்சைக்கு பிறகு குளிக்கலாமா? பணிக்கு செல்லலாமா?
உங்கள் தினசரி செயல்பாடுகள் அனைத்தையும் லேசர் சிகிச்சைக்கு பிறகு செய்யலாம். -
லேசர் சிகிச்சைக்கு பிறகு எனக்கு வலி ஏற்படுமா?
இல்லை. லேசர் சிகிச்சையின்போது உங்கள் கண்கள் மறத்துப் போகச் செய்வதால் வலி எதையும் உணர மாட்டீர்கள். வெகு சில நோயாளிகளுக்கு லேசான வலி இருக்கலாம். ஆனால் இது 3-4 மணி நேரங்களுக்குதான் இருக்கும். வலியைக் குறைக்க, சொட்டு மருந்துகள் வழங்கப்படும். -
எனக்கு கிட்டப்பார்வை இருக்கிறது. அதற்கு கண்ணாடி அணிந்து வருகிறேன். எனக்கு விழித்திரையில் துளை இருப்பதாகவும் லேசர் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர் கூறினார். அவசியம் செய்ய வேண்டுமா?
ஆம். லேசர் சிகிச்சை மூலம் துளையை அடைக்க முடியும். இதனால் விழித்திரைப் பிரிதல் தவிர்க்கப்படும். -
லேசர் சிகிச்சைக்கு பிறகு, பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனை வரவேண்டுமா?
ஆம். குறைந்தது ஒரு வருடத்திற்கு தொடர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவர்களால் கண்டறிய முடியும். புதிதாக ஏதேனும் விழித்திரை பாதிப்பு தோன்றியுள்ளதா என்பதையும் கண்டறிய முடியும். -
விழித்திரை ஊசிக்கு பிறகு முழுமையான பார்வை எனக்கு கிடைக்குமா?
பார்வையிழப்பு ஏற்படாமல் தவிர்க்கவே விழித்திரை ஊசி செலுத்தப்படுகிறது. விழித்திரை மேலும் பாதிப்படையாமல் தவிர்க்கவே இந்த சிகிச்சை. சிலருக்கு பார்வையில் முன்னேற்றம் ஏற்படலாம். ஆனால் உத்தரவாதம் இல்லை. -
விழித்திரை ஊசி பலமுறை போடா வேண்டுமா?
உங்கள் முதல் ஊசி எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்தது. விழித்திரை சிக்கல்கள் மீண்டும் ஏற்பட்டால் மீண்டும் ஊசி போட வேண்டிய நிலை ஏற்படும். -
கண்ணுக்குள் ஊசி செலுத்தப்பட வேண்டும் என எனக்கு பரிந்துரைத்துள்ளனர். எங்கே ஊசி போடுவார்கள்? இதனால் சிக்கல்கள் தோன்றுமா?
கண்ணின் வெள்ளைப்பகுதியில் ஊசி செலுத்தப்படும். மயக்க மருந்து உங்களுக்கு கொடுக்கப்படும். எனவே, உங்களுக்கு வலி தெரியாது. ஊசி செலுத்துவதால் எந்த சிக்கலும் ஏற்படாது.
-
விழித்திரை ஊசியால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?
வெகு சில பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால், மிகவும் அரிது. விழித்திரையில் ஊசி செலுத்தும் முறை மிகவும் பாதுகாப்பனது. சிகிச்சை நடைபெற்ற அன்றே நீங்கள் வீடு திரும்பலாம்.