அறிமுகம்:
நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பங்கள், விழித்திரை எனும் மெல்லிய திசுவில் சரியாகக் குவிந்தால் நம்மால் பொருட்களை சரியாகப் பார்க்க முடியும். Refractive errors எனும் பார்வை குறைபாடு உள்ள கண்களில் விழித்திரையில் ஒளி சரியாகக் குவியாது. இதனால் பொருட்கள் மங்கலாகத் தெரியும். இதனைத் தவிர்க்க, கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிய வேண்டும். கண்ணாடியில் உள்ள லென்ஸ் வழியாக ஒளியானது விழித்திரையில் சரியாகக் குவியும். பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்.
கிட்டப் பார்வை (Myopia)
கிட்டப் பார்வை எனும் பார்வை குறைபாட்டில் அருகில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியும். ஆனால், தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியும். இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவியும். நடுவில் மெல்லியதாகவும் ஓரங்களில் தடிமனாகவும் உள்ள குழி லென்ஸ் எனப்படும் கான்கேவ் (concave) லென்ஸை கண் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இதனை கண்ணாடியில் பொருத்தி அணிவதால் கிட்டப் பார்வை குறைபாடு நீங்கும்.
தூரப் பார்வை (Hyperopia)
தூரப் பார்வை எனும் குறைபாட்டில் தூரத்தில் மற்றும் அருகில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியும். இந்தக் குறைபாடு உள்ள கண்களில் விழித்திரையைத் தாண்டி அதன் பின்னால் குவியும். இதற்கு நடுவில் தடிமனாகவு ஓரங்களில் மெல்லியதாகவும் உள்ள குவி லென்ஸ் எனப்படும் கான்வெக்ஸ் (convex) லென்ஸ் அணிய வேண்டும்.
சமச்சீரற்ற பார்வை (Astigmatism)
இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளி சரியாகக் குவியாது. கருவிழி வளைவு ஆரங்களில் மாற்றங்கள் இருந்தால் சமச்சீரற்ற பார்வை உண்டாகும். உருளை வடிவ லென்ஸ் அணிவதன் மூலம் இந்தக் குறைபாட்டைத் தவிர்க்கலாம்.
கண்ணாடிகளைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியவை:
  • கண்ணாடி கடையில் பணிபுரிபவரின் உதவியுடன் சரியான ஃபிரேம் அளவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பிளாஸ்டிக் லென்ஸ்கள் மற்றும் ஃபிரேம்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை.
  • குழந்தைகளுக்கு கண்ணாடி லென்ஸ்கள் மாறும் உலோக ஃபிரேம்களைத் தவிர்க்கவும். அவை உடைந்தால் குழந்தைகளுக்கு அடிபட நேரிடும்.
  • ரிம் எனும் கம்பி இல்லாத ஃபிரேம்களும் எளிதில் உடைந்து விடும்.
  • நோஸ் பேட் எனும் மூக்கில் பொருந்தும் பட்டைகளைத் தவிர்க்கவும். கண்ணாடியின் சீரமைப்பை இது கெடுத்துவிடும் அபாயம் உள்ளது. கண்ணாடியிலும் கீறல்களும் தோன்றும்.
கண்ணாடிகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள்:
  • கண்ணாடியை அணியும்போதும் கழட்டும்போதும் இரு கைகளையும் பயன்படுத்தவும்.
  • கண்ணாடியைப் பயன்படுத்தாதபோது கண்ணாடிப் பெட்டியில் எப்போதும் வைக்கவும். வேறு எங்காவது வைக்க நேரிட்டால், கண்ணாடி லென்ஸை மேல்நோக்கி வைக்கவும். கீழ்நோக்கி வைத்தால் கீறல் விழும் வாய்ப்பு உள்ளது.
  • குழாய் நீரில் முறையாகக் கண்ணாடியைக் கழுவவும். மிருதுவான துணி கொண்டு துடைக்கவும்.
  • உங்கள் சட்டை, சுடிதார் அல்லது நீங்கள் அணிந்திருக்கும் துணி கொண்டு கண்ணாடியைத் துடைக்க வேண்டாம்.
நினைவில் கொள்ள வேண்டியவை:
  • முறையான கண் பரிசோதனை அவசியம். குழந்தைகள் வளரும்போது அவர்களின் கண்களும் வளரும். கண்களின் வளர்ச்சிக்கு ஏற்ப உங்கள் லென்ஸ் அளவு அதிகரிக்கப்பட வேண்டும்.
  • உங்களில் ஒரு குழந்தைக்கு Refractive Error எனும் பார்வை குறைபாடு இருந்தால் உங்களது மற்ற குழந்தைகளுக்கும் கண் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • காண்டாக்ட் லென்ஸ் அல்லது கண்ணாடி – எதை நீங்கள் அணிந்தாலும் அவற்றை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் தொடர்ந்து அணியவும்.
  • கிட்டப் பார்வையின் பாதிப்பு அதிகம் இருந்தால், விழித்திரை பிரிதல் தோன்றும் அபாயம் அதிகம்.
குழந்தைகளுக்கு Refractive Error எனும் பார்வை குறைபாடு உண்டாகக் காரணங்கள்:
  • கண் லென்ஸில் மாற்றம் ஏற்படுதல்
  • கருவிழி வளைவு ஆரங்கள் மற்றும் மாற்றம் ஏற்படுதல்
அறிகுறிகள்:
  • பள்ளி கரும்பலகையில் எழுதப்படும் சிறிய எழுத்துகளைப் படிக்க உங்கள் குழந்தை சிரமப்படுதல்
  • தூரமாக உள்ள பொருட்களைப் பார்க்க, கண்களைச் சுருக்குதல்
  • படிக்கும்போது புத்தகங்களை முகத்திற்கு மிக அருகில் வைத்து படித்தல்
  • கண் வலி, தலை வலி எனக் குழந்தைகள் தொடர்ந்து கூறுதல்
  • தெளிவாகப் பார்ப்பதற்காக கண்களை அடிக்கடி தேய்த்தல் (அடிக்கடி தேய்த்தால், கண் இமை வீங்கும்)
  • கிட்டப் பார்வை அதிகம் உள்ள குழந்தைகள், அதிக நேரம் படித்தால் கண் வலி உண்டாகும்.
  • சில குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு காரணமாக மாறுகண் கூட ஏற்படலாம்.
மேற்கூறிய காரணங்களில் ஏதாவது ஒன்று இருந்தாலும் கண் மருத்துவரிடம் கட்டாயம் அழைத்துச் செல்லவும்.
சிகிச்சை:
Refractive Errors எனும் பார்வை குறைபாடுகளுக்கு கண்ணாடி அணிவதே சிகிச்சை. குழந்தைகள், வளர்ந்து கொண்டே இருப்பதால் வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து கண் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எனில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் எனில் கண்களில் காண்டாக்ட் லென்ஸ் வைத்துக் கொள்ளலாம். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், மருத்துவரின் பரிந்துரைக்கு பிறகு லேசிக் எனும் லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம். காண்டாக்ட் மற்றும் லேசர் செய்துகொள்பவர்கள் கண்ணாடி அணிய தேவையில்லை.
நினைவில் கொள்ள வேண்டியவை:
  • கண்ணாடி அணிவது அவமானமோ, குறைபாடோ அல்ல என்பதை குழந்தைகள் உணர வேண்டும்.
  • கண்ணாடி அணியும் தேவை இருந்து, அதை அவர்கள் அலட்சியப்படுத்தினால் அவர்களால் பொருட்களை மங்கலாக மட்டுமே பார்க்க முடியும்.
  • மங்கலாக அணிந்து பார்க்கும்போது குழந்தைகள் பள்ளியில் மிகவும் சிரமப்படுவார்கள்.
  • வைட்டமின் A, தேவையானதுதான். ஆனால் கண்ணாடி அணியும் தேவை உள்ளவர்கள், வைட்டமின் A அதிகம் உள்ள உணவை அதிகம் உட்கொண்டால் மட்டும் போதாது. கண்ணாடி அணியத்தான் வேண்டும்.
  • எந்நேரமும் கண்ணாடி அணிந்திருக்கும்படி குழந்தைகளை ஊக்கப்படுத்தவும்.
Back to English Version