அறிமுகம்:

கண்ணில் உள்ள லென்ஸில் வெள்ளை நிறப் படிமம் படிவதே கண்புரை எனப்படுகிறது. பொதுவாக, ஒளியை அனுமதிக்கும் லென்ஸ், கண்புரையால் பாதிக்கப்பட்டிருந்தால் ஒளியை அனுமதிக்காது. இதன் விளைவு, பார்வை மங்கலாகத் தெரியும். கண்புரையானது ஒரு கண்ணிலோ இரு கண்ணிலோ வரலாம். பெரியவர்களை கண்புரை பொதுவாக பாதித்தாலும் குழந்தைகளையும் சிறுவர்களையும் தாக்கும் அபாயமும் உள்ளது. குழந்தைகளின் கண்கள் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதால், அவர்களுக்கு கண்புரை ஏற்பட்டிருந்தால் அதற்கு உடனடியாகச் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும். சிகிச்சையைத் தாமதப்படுத்தினால் சோம்பேறிக் கண் எனும் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வகைகள்:

இருவகை கண்புரைகள் உள்ளன. பிறவிக் கண்புரை மற்றும் இளம் வயதில் ஏற்படும் கண்புரை. பிறவிக் கண்புரை என்பது பிறந்த குழந்தைகளுக்கு பிறக்கும்போதே உள்ள கண்புரை. இளம் வயதில் ஏற்படும் கண்புரை என்பது சிறுகுழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்படுவது.

ஏற்படுவதற்கான காரணங்கள்:

குழந்தைகளுக்கு கண்புரை ஏற்படுவதற்கான சரியான காரணங்களை இன்னும் கண்டறிய முடியவில்லை. பிறவிக் கண்புரை தாக்குவதற்கு மரபணுச் சிக்கல்கள் காரணமாக உள்ளன. கருவுற்ற காலத்தில் தாய்க்கு ஏற்பட்ட தொற்று நோய்களும் காரணமாக அமைகின்றன.

இளம் வயதில் ஏற்படும் கண்புரை என்பது கண்ணில் அடிபடுதல், ஒட்டுண்ணியால் ஏற்படும் தொற்று,  களக்டோஸமியா (பாலில் உள்ள சர்க்கரை,  உடலில் கலக்காததால் ஏற்படும் குறைபாடு), நீரிழிவு போன்ற காரணங்களால் ஏற்படும்.

உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் குழந்தைப் பருவத்தில் கண்புரை ஏற்பட்டிருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

 அறிகுறிகள்:
  • மோசமான பார்வை
  • வேகமான ஆடும் நிலையில் கண் அசைவுகள்
  • வெவ்வேறு திசைகளைப் பார்த்தபடி கண்கள் இருப்பது
  • வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் கருவிழி இருப்பது.

இந்த அறிகுறிகள், குழந்தைகளிடம் உள்ளதாக என்பதைக் கண்டறிவது சற்று சிரமமான காரியம்தான். பிறரைக் கண்டறியவோ பொருட்களைப் பார்க்கவோ குழந்தைகள் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டாலோ அவை உங்களது குழந்தைக்கு ஏதோ தவறாக உள்ளது என்பதை உங்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைக் குறிப்புகள்.

குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைகள்:

அறுவை சிகிச்சை ஒன்றே கண்புரைக்கான சிகிச்சை. குழந்தைகளுக்கான கண்மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள், இந்த அறுவை சிகிச்சையை மிகவும் கவனத்துடன் மேற்கொள்வார்கள். சில குழந்தைகள், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்ணாடி அணிய வேண்டியிருக்கும்.

கண்புரை என்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டதும் எவ்வளவு சீக்கிரம் அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். அறுவை சிகிச்சைக்கு முன்னதாகக் குழந்தைகளுக்கு வலி தெரியாமல் இருக்க, மயக்க மருந்து கொடுக்கப்படும். மிகப் பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்யபடுவதுடன் குறைவான நேரத்தில் முடிந்துவிடும். பெரும்பாலான நேரங்களில் மிகத் தெளிவான பார்வை அப்போதே கிடைத்து விடும்.

அறுவைசிகிச்சையின் வகைகள்:

எல்லா கண்புரை அறுவை சிகிச்சைகளிலும் கண்களில் உள்ள புரை நீக்கப்படும். எனினும், மருத்துவர் பின்வரும் காரணங்களில் ஒன்றைத் தேர்வுசெய்வார்.

  1. கண்புரை உள்ள லென்ஸ் அகற்றப்பட்டபின், உங்கள் குழந்தை கண்ணாடியோ காண்டாக்ட் லென்ஸ் எனப்படும் ஒட்டுக் கண்ணாடியையோ அணியலாம்.
  2. கண்புரை உள்ள லென்ஸிற்கு பதிலாக இன்டிராகுலர் லென்ஸ் பொருத்தப்படும்.

எந்த முறை சிறந்தது என்பதை மருத்துவர் பின்வரும் காரணிகளைக் கருத்தில் கொண்டு மேற்கொள்வார்கள்.

  1. குழந்தையின் வயது
  2. கண்புரையின் வகை
  3. பிற கண் நோய்கள்
  4. நிலைமையைப் புரிந்துகொள்ளும் நிலையில் பெற்றோர்கள் உள்ளார்களா என்பதைப் பொறுத்து.

இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு IOL லென்ஸ் மிகப் பாதுக்காப்பானது. வெகு சில நேரங்களில் அந்த வயதைவிடக் குறைவான குழந்தைகளுக்கும் பொருத்தப்படும்.

அறுவை சிகிச்சைக்குப் பின்:
  1. கண் பரிசோதனைகளுக்கு குழந்தைகள் கண்டிப்பாக செல்ல வேண்டும். எவ்வளவு கால இடைவெளியில் நீங்கள் வரவேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
  2. கண்கள் குணமாகி வருவதை உறுதி செய்துகொள்ள இரண்டு, மூன்று நாட்கள் குழந்தையானது மருத்துவமனையிலேயே தங்கி இருக்க வேண்டும்.
  3. நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு வெளியில் செல்வதைக் குழந்தை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். கண்ணில் அடிபடுவதைக் குறைக்கவே இந்த முன்னெச்சரிக்கை.
  4. குழந்தை, அறுவை சிகிச்சை வகையைப் பொறுத்து கண்ணாடி கட்டாயம் அணிய வேண்டும்.

பெற்றோர்கள் கேட்கும் சில பொதுவான கேள்விகளும் அவற்றிற்கு எங்கள் ஆலோசகர்கள் அளிக்கும் பதில்களும்

பிறந்த குழந்தைக்கு இரு கண்களிலும் கண்புரை இருப்பது தெரியவந்தால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா?

ஆம். பிறந்து ஆறு வாரங்கள் கழித்துக்கூட அறுவை சிகிச்சை செய்யலாம். பெரும்பாலும், பிறந்து இரண்டு – மூன்று மாதங்களில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்.

இரண்டு மாதக் குழந்தையால் அறுவை சிகிச்சையைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

முடியும். தொழில்நுட்பமும் அறுவை சிகிச்சை முறைகளும் மிகவும் மேம்பட்டு விட்டன. பயப்படத் தேவையில்லை. அறுவை சிகிச்சைக்கு முன்பாக மருந்து கொடுக்கப்படும். மருத்துவர்கள், அறுவை சிகிச்சையை மிகக் கவனமாகச் செய்வார்கள்.

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு தெளிவான பார்வை கிடைக்குமா?

பின்வரும் நிலைகளைப் பொறுத்தே, இதற்கு சரியான பதில் கூற முடியும்:

  • உங்கள் குழந்தையின் வயது
  • அறுவை சிகிச்சையின் வகை
  • கண்புரை தாக்கப்பட்ட காலத்திற்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலத்திற்கும் இடையேயான இடைவெளி
  • கண்ணாடியைத் தொடர்ந்து குழந்தைகள் அணிகிறார்களா என்பதைப் பொறுத்து
  • கண்களும் மூளையும் எந்த அளவில் வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது என்பதைப் பொறுத்து

கண்புரையின் தீவிரம் குறைவாக இருந்தாலோ ஆரம்பக் காலக்கட்டத்திலே சிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலோ சிறப்பான பார்வை கிடைப்பதற்கு மிக அதிக வாய்ப்புகள் உள்ளன.

குழந்தைகள், தடிமனான கண்ணாடி அணிய வேண்டுமா?

சிறுவர்கள், மிகவும் புத்திசாலிகள். கண்ணாடி அணிய முதலில் தயங்கினாலும் கண்ணாடி மூலம் தெளிவாகப் பார்க்க முடிவதை சீக்கிரம் உணர்வார்கள். குழநதைகள் கூட கண்ணாடி அணிய விருப்பம் தெரிவிப்பார்கள். உங்கள் குழந்தைகளுக்கு IOL லென்ஸ் பொருத்தப்படவில்லை என்றால் மட்டுமே தடிமனான கண்ணாடிகள் அணிய வேண்டிய தேவை இருக்கும். கண்களில் IOL லென்ஸ் பொருத்தப்பட்ட குழந்தைகளுக்கு மெலிதான, கிட்டப் பார்வைக்கான கண்ணாடிகளை அணியலாம்.

ஏன் எனது குழந்தைக்கு IOL பொருத்தப்படவில்லை?
  • கண்கள் மிகச் சிறியதாக உள்ளன.
  • இரண்டு கண்களிலும் கண்புரை இருந்து, குழந்தையின் வயது இரண்டுக்கும் குறைவாக உள்ளது.
  • கண்ணில் வீக்கம் உள்ளது.
சரிவிகித உணவும் வைட்டமின் மாத்திரைகளும் கண்புரையைக் குணப்படுத்துமா?

இல்லை. அவற்றால் குணப்படுத்த முடியாது.

Back to English