அறிமுகம்:
கண்ணின் மேல் இமையானது தொய்வடைந்து கீழே தொங்கியபடி இருக்கும். இதனை கண் மருத்துவ உலகில் மேலிமை தொய்வு (Ptosis) என குறிப்பிடுவார்கள். ஆரம்ப நிலையில் இமையானது ஓரளவு தொய்வடைந்து இருக்கும். நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு கண்ணை மறைத்தபடி இமை இருக்கும். பார்வையையும் மறைக்கும்.
வகைகள்:
  • பிறக்கும்போதே உள்ள மேலிமை தொய்வு
  • நாளடைவில் ஏற்படும் மேலிமை தொய்வு
பிறக்கும்போதே உள்ள மேலிமை தொய்வு:
இது, மேலிமை தொய்வில் பொதுவாகக் காணப்படும் வகை. பிறந்த குழந்தைகளுக்கு கண் இமைகளைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனமாக இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். சில குழந்தைகளுக்கு இமையைத் திறப்பதில் கூட சிக்கல் இருக்கும்.
நாளடைவில் ஏற்படும் மேலிமை தொய்வு:
இந்த வகை மேலிமை தொய்வு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, வயது மூப்பு காரணமாக ஏற்படுவது. வயதாவதால் கண்களைச் சுற்றியுள்ள தசைகள் தளர்வடைந்து பலவீனமடையும். இதனால் மேலிமை தொய்வு ஏற்படும். தசை நோய், நரம்பியல் நோய் காரணமாகவும் சிலருக்கு மேலிமை தொய்வு ஏற்படலாம்.
அறிகுறிகள்:
இமை தொய்வடைந்து இருப்பதைப் பார்த்தாலே தெரியும். இருப்பினும் வேறு சில அறிகுறிகளும் உள்ளன.
  • முகத்தை உயர்த்திப் பார்த்தல்
  • பார்வைத் திறன் பரிசோதனைகளின்போது பார்வை மோசமாக இருப்பதை உணர்தல்
  • மாறுகண்
சிகிச்சை:
முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் பார்வைத் திறன் குறையத் தொடங்கும். காலதாமதமின்றி சிகிச்சை எடுத்துகொள்வது அவசியம். தீவிர நிலையை எட்டியவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. தீவிர நிலை என்பது பார்வையை மறைக்கும்படி இமை தொய்வடைந்து இருப்பது. அறுவை சிகிச்சை பாதுகாப்பானது. கீழே இறங்கியுள்ள இமையை மேலே உயர்த்தி அறுவை சிகிச்சை செய்யப்படும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
  • அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண் இமையானது இயல்பாக உள்ள மற்ற கண் இமை போல தெரியுமா? அல்லது ஏதேனும் வித்தியாசம் இருக்குமா?

ஏறக்குறைய இரண்டு இமைகளும் ஒரே மாதிரிதான் இருக்கும். அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு இமைகளின் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருக்காது. ஓரளவு வித்தியாசம் இருக்கும். ஆனால் நாளடைவில் இது குணமடைந்து விடும்.

  • அறுவை சிகிச்சை, சிக்கலானதா அல்லது எளிமையானதா?

கண் இமையை மேலே தூக்குவதற்கு மட்டுமே அறுவை சிகிச்சை. என்வெம் இது எளிமையான அறுவை சிகிச்சைதான். அறுவை சிகிச்சையின்போது கண்ணை எதுவும் செய்யப்போவதில்லை. குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர் மயக்க மருந்து கொடுக்கப்படும்.

  • இரண்டு கண்களிலும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா?

ஆம்.

  • அறுவை சிகிச்சைக்கு பின், எனது குழந்தையின் கண் ஓரளவு திறந்த நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில். இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? அல்லது இந்த நிலை நிரந்தரமாக நீடிக்குமா? என்ன காரணம்?

கண் இமையை மேலே தூக்குவதற்கு இமை இழுக்கப்படும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு சில நாட்கள் இமை தூக்கியபடி இருக்கலாம். கண் பாதிப்படையாமல் தவிர்க்க, மருத்துவரால் வழங்கப்பட்ட ஆயின்மென்ட்டை இரவு நேரத்தில் தடவவும். நாளடைவில் இது சரியாகும்.

  • அறுவை சிகிச்சைக்கு பிறகு இமை மீண்டும் கீழே இறங்குமா?

ஆம். மேலே இழுக்கப்பட்ட திசுவானது மிக அரிதாக மீண்டும் வலிமையிழந்து கீழே இறங்கலாம். அவ்வாறு ஏற்படும்போது மற்றொரு மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்படும்.

  • அறுவை சிகிச்சைக்கு பிறகு எத்தனை நாட்களில் இயல்பான வேலைகளைத் தொடங்க முடியும்?

வீக்கம் குறையத் தொடங்கும்போது இயல்பான பணிகளை மேற்கொள்ளலாம். குழந்தைக்கு ஔவை சிகிச்சை செய்திருந்தால், தையல் அகற்றும்வரை பள்ளிக்கு அனுப்பத் தேவையில்லை. இதற்கு இரண்டு வாரங்கள் ஆகும்.

Back to English version