அறிமுகம்:
கண்களில் உள்ள ஒளி உணர்திறன் திசுவிற்கு விழித்திரை எனப்படுகிறது. இது, நாம் பார்க்கும் விஷயங்களை பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்புகிறது. விழித்திரையில் பாதிப்பு ஏற்படும்போது, விழித்திரை பிரிதல் ஏற்படலாம். முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் நிரந்தர பார்வையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
நினைவில் கொள்ள வேண்டியவை:
- உங்கள் பார்வையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாகக் கண் மருத்துவரை அணுகவும்!
- பார்வை குறைபாடுகளுடன் வாழ்வை எதிர்கொள்ள குறை பார்வை மையங்கள் (அரவிந்த் குறை பார்வை ஆலோசனை மையம்) உங்களுக்கு உதவும்.
அறிகுறிகள்:
உங்கள் விழித்திரை, அபாயக்கட்டத்தில் உள்ளதை சில அறிகுறிகள் மூலம் உணரலாம். இதை மிகத் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கீழ்க்கண்டவற்றை நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும்:
- நீங்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் கருப்பு வளையங்கள், கருப்புப் புள்ளிகள் தோன்றுதல்
- இரவில் மின்னல் வெட்டுவது போல் தெரிதல்
- மங்கலான பார்வை
விழித்திரை பிரிந்தால், பாதிக்கப்பட்ட கண்ணில் விரைவில் பார்வை குறையும். நீங்கள் பார்க்கும் இடங்களிலெலாம் கருப்பு நிழல் தோன்றும். விழித்திரை பிரிதல் ஏற்பட்டால் மருத்துவ அவசர நிலை என்பதை உணரவும்.
அபாயக் காரணிகள்:
- கிட்டப் பார்வை
- மற்றொரு கண்ணில் ஏற்கனவே விழித்திரை பிரிதல் இருத்தல்
- குடும்பத்தினருக்கு விழித்திரை பிரிதல் இருத்தல்
- கண்ணில் காயம் உண்டாகுதல்
- கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டிருத்தல்
சிகிச்சை:
விழித்திரை அறுவை சிகிச்சை செய்வதே (scleral buckle அல்லது vitrectomy) விழித்திரைப் பிரிதலுக்கான தீர்வு. Scleral buckle எனும் அறுவை சிகிச்சையில் கரு வளையத்திற்கு வெளியே சிறிய சிந்தெடிக் பேன்ட் (synthetic band) வைக்கப்படும். பிரிந்த விழித்திரையை ஓரளவு தள்ள இது பயன்படும். Vitrectomy எனும் மற்றொரு அறுவை சிகிச்சையில் சிலிக்கான் எண்ணெய் அல்லது கேஸ் கொண்டு கண் திரவம் (vitreous) மாற்றப்படும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து எந்த அறுவை சிகிச்சை என மருத்துவர் முடிவு செய்வார்.
விழித்திரை பிரிதல் உள்ள நோயாளிகளில் 90% வரை நவீன தெரபி மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சில நேரங்களில் மறுசிகிச்சை தேவைப்படலாம். இருப்பினும், பார்வையில் முன்னேற்றம் இருக்குமா என்பதைக் கணிக்க முடியாது. பாதிப்பு தீவிரமடையும்முன் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
Back to English Version