கண்ணில் உள்ள கருவிழியில் Fusarium species, Aspergillus species, Candida species போன்ற பூஞ்சைகளால் அலர்ஜியோ பாதிப்போ ஏற்படும்.
இப்பூஞ்சைகள் தாவரங்களில் அதிகம் காணப்படுகிறது. எனவே விவசாய நிலங்கள், செடிகள் அதிகமிருக்கும் இடங்களில் பணிபுரிவோர் இப்பூஞ்சைகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம். கண்களில் அடிபட்டபின், குறிப்பாக குச்சி, முள் போன்றவற்றால் கண்களில் காயம் ஏற்பட்டவர்களுக்கு இப்பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இவை தவிர, சில கண் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்களும் மற்றும் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்களுக்கும் கருவிழியில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.
கண்களில் வலி, சிவப்பு, அதிகளவு நீர் வடிதல், பீளை வெளியேறுதல், வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுதல், மங்கலான பார்வை போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். தாவரங்கள் அதிகம் இருக்கக்கூடிய சூழ்நிலைகளில் பணிபுரிவோருக்கு இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அருகிலுள்ள கண் மருத்துவரை அணுகவும்.
கண் மருத்துவர் சில பரிசோதனைகளின் மூலமாக பூஞ்சை பாதிப்பினால் கருவிழி பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வார். மருத்துவப் பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், ஆண்டிஃபங்கல் சொட்டு மருந்தினை மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார்.
பாதிப்பின் தீவிரத் தன்மையைப் பொறுத்து மருந்தினை பயன்படுத்த வேண்டிய கால அளவு மாறுபடும். சொட்டு மருந்தினால் சரிசெய்ய இயலாவிட்டால் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
காயம் ஏற்படுத்துவது போன்ற தாவரங்கள் அதிகமுள்ள இடங்களில் பணிபுரிவோர் தகுந்த பாதுகாப்புக் கண்ணாடியுடன் பணிபுரிந்தால் பூஞ்சைகளால் ஏற்படும் கருவிழி பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
மிகவும் அரிதாகவே இந்நோயின் தாக்கம் மக்களிடையே உள்ளது. இருப்பினும், எதிர்பாராமல் காயம் ஏற்பட்டால், அதனை அலட்சியாமாகக் கருதாமல் கண் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். இல்லையெனில் இப்பாதிப்பு நிரந்தர பார்வையிழப்பிற்கும் வழி வகுக்கும்.