Paykwik

மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுதல்

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உருவாகியுள்ள நெருக்கடியை எதிர்கொள்வது சவால்தான். கிடைக்கும் வளங்களைக் கொண்டு, திருநெல்வவேலி-அரவிந்த் எவ்வாறு உடனடியாகச் செயல்பட்டு, இக்கட்டான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.

நம் அனைவருக்கும் ஊரடங்கு என்பது மிகவும் புதியது. எனினும் முறையான திட்டமிடல் மூலம் இந்தக் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளவும் கிடைத்த நேரத்தை திறம்பட பயன்படுத்திக் கொள்ளவும் கற்றுக்கொண்டோம். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, சிக்கல்களை உடனடியாக உணர்ந்து, அவற்றைக் களைய தயாரானோம். தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் உள்ள மருத்துவமனைகளுடன் இணைந்து உடனடியாக செயலில் இறங்கினோம்.

இந்த நாட்களில் நாங்கள் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் எங்களது தனித்துவமான செயல்பாடுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் சேவைகளை சிறந்த முறையில் தொடர்ந்ததுடன் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பில் மிக அதிக கவனம் செலுத்தினோம். எங்கள் செயல்பாடுகளை குறிப்பிடும்போது சாதாரணமாகக் கூட தெரியலாம். கடலுக்குள் இருக்கும் ஒரு மிகப் பெரிய பனி மலையின் நுனி மட்டுமே வெளியே தெரியும். ஆனால் மலையின் பிரமாண்டம் மிகப் பெரியது. அதுபோல இந்தக் காலக்கட்டத்தில் நாங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளால் வருங்காலங்களில் எங்கள் மருத்துவமனைகளில் ஏற்படும் மாற்றங்கள் பிரமிப்பானதாக இருக்கும்.

இந்தக் கடினமான சூழலில் ஆதரவளித்து வழிகாட்டிய மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைவருக்கு எங்களது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேவையான பாதுகாப்பு உபகரணங்களை விரைவாக அனுப்பி வைத்த ஆரோலேப் நிறுவனத்திற்கும் நன்றி.

 – Dr.R. மீனாட்சி மற்றும் குழுவினர்

மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுதல்

கொரோனோ பெருந்தொற்று காரணமாக நேரிடையாகவும் மறைமுகமாகவும் உருவான சவால்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை எதிர்கொள்ள, மருத்துவமனை கட்டமைப்பில் சில மாற்றங்களை உருவாக்க வேண்டியிருந்தது.

பாண்டிச்சேரி-அரவிந்த் CMO Dr. வெங்கடேஷ் அவர்களின் அறிவுரைப்படி நோயாளிகள் பதிவு செய்யும் இடங்களில், தரையில் மூன்று வண்ணங்களில் பாதச்சுவடுகள் வரையப்பட்டன. இந்த பாதச்சுவடுகளைப் பின்பற்றி, தாங்கள் செல்ல வேண்டிய பரிசோதனைப் பகுதிகளுக்கு செல்கின்றனர். சமூக இடைவெளியைப் பின்பற்றும் இந்நேரத்தில் நோயாளிகளை செவிலியர்கள் அழைத்துச் செல்வது தவிர்க்கப்பட்டது. செவிலியர்களுக்காகக் காத்திருக்காமல் நோயாளிகள், தாங்களே செல்வதால் காத்திருக்கும் பகுதியில் கூட்டமும் தவிர்க்கப்படுகிறது.

காத்திருக்கும் இடங்களில் இடவசதி பற்றாக்குறை எப்போதும் உள்ள சவால். தற்போது துணைக்கு வருபவர்கள் பரிசோதிக்கும் பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. எனினும், சூரிய வெப்பத்தில் அவர்களைக் காத்திருக்க வைக்காமல், மர நிழல் உள்ள இடங்களில் அவர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கான கார் பார்க்கிங் இடங்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அங்கேயும் துணைக்கு வருபவர்கள் காத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த ஊரடங்குக் காலத்தில் எலக்டிரீசியன்களும் ஐ.டி துறையினரும் உத்வேகத்துடன் செயல்பட்டு, இலவச மருத்துவமனையில் EMR வசதியை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். கடந்த 10.04.2020 முதல் இலவச மருத்துவமனையில் சுமுகமாக, சிக்கலின்றி EMR செயல்படுகிறது. EMR-ஐப் பயன்படுத்தும் விதம் குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்த ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திக் கொண்டோம்.

பொதுவாக, நோயாளிகள் மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கிக் கொண்டு பின்னர் தாங்கள் சென்ற கிளினிக்குகளில் உள்ள ஆலோசனைப் பகுதிக்கு செல்வர். பாண்டிச்சேரி-அரவிந்தில் பின்பற்றப்படும் முறையைப் போல இங்கும் மருந்துக் கடையில் ஒரு செவிலியர் பணியமர்த்தப்பட்டு, நோயாளிகளுக்கு ஆலோசனை செய்யும் பணி மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது. இதனால் நோயாளிகள் மீண்டும் கிளினிக்குகளுக்கு செல்வது தவிர்க்கப்பட்டது. மருந்துக் கடையில் போதுமான இடவசதி இல்லாததால் சிறப்புப் பிரிவுகளுக்கான மருந்துகள் மருத்துவமனை அடித்தளத்திலும் விற்பனை செய்யப்பட்டது.

பரிசோதனைப் பகுதிகளில் பலவிதமான மேஜைகளுக்கு ஒவ்வொரு வருடமும் பண்டிகைக் காலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காலங்களில் வண்ணம் அளிக்கும் பணி நடைபெறும். இவ்வருடத்தில் மழைப்பொழிவு அதிகம் இருந்ததால் அந்தப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. இதுபோன்ற நிலுவையில் உள்ள பல பணிகளை ஊரடங்கால் நோயாளிகள் வரத்து குறைவாக இருப்பதால் தற்போது மேற்கொண்டோம்.

சவாலான நேரங்களிலும் தடைபடாத பாதுகாப்பு

அவசர கண் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு எவ்வித தடங்கலுமின்றி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் முறையாக வழங்கப்படுவதுடன் அவற்றை தீவிரமாக மேற்பார்வையிடும் பணிகளும் நடைபெறுகின்றன.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு விழித்திரை பரிசோதனைகளை ROP குழுவினர் மேற்கொண்டனர். மாவட்ட எல்லைகளைத் தாண்டி குறைமாத குழந்தைகள் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல ஆரம்பத்தில் தடை இருந்தது. துணை ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி பெற்ற பின் விழித்திரை பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளுக்கு ஊசிகள் மற்றும் லேசர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் அந்தக் குழந்தைகள் நிரந்தர பாதிப்பிற்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்பட்டனர். பல சவால்களுக்கு மத்தியிலும், தேவையற்ற பார்வையிழப்பைத் தடுக்க, ஊரடங்கு காலத்திலும் தங்களால் முடிந்ததைச் செய்வதால் மிகுந்த திருப்தி அடைகிறோம்.

நோயாளிகளின் வசதியை மனதில் கொண்டு, காணொளி ஆலோசனை (tele-consultation) வசதி ஏற்படுத்தப்பட்டது. அதற்கு ஓரளவே ஆதரவு இருந்தது. எனவே நோயாளிகள் வாட்ஸ்-அப் (Whatsapp consultation) மூலம் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்தோம். இந்த வசதி மூலம் மருத்துவமனையை எளிதில் தொடர்பு கொள்ள முடிவதால் நல்ல வரவேற்பு உள்ளது. தொடங்கியது முதல் இப்போது வரை 300 நோயாளிகள் வாட்ஸ்அப் ஆலோசனை மூலம் பயனடைந்துள்ளனர்.

கற்றோம்! பகிர்ந்தோம்!!

அரவிந்த்-திருநெல்வேலியில் முதன்முதலில் ஆன்லைன் CME நடத்தப்பட்டது. 22.03.2020 அன்று நடைபெறுவதாக இருந்தUpdate on Ophthalmic Imaging எனும் CME, கொரோனா ஊரடங்கு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு, ஆன்லைனில் Zoom இணையதளம் வழியாக நடத்தி, Youtube-இல் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யலாம் என்றும் முடிவுசெய்யப்பட்டது. நேபாளத்தில் உள்ள SEVA நேச மருத்துவமனைகளுக்கு (SEVA partner hospitals) SEVA அறக்கட்டளையின் சூசன் கில்பர்ட், இந்தஆன்லைன் CME விவரங்களைப் பகிர்ந்திருந்தார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரவிந்தின் முன்னாள் மருத்துவ மாணவர்களுக்கும் பகிரப்பட்டது.ஆன்லைன் CME-க்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. மார்ச் 20-23 வரை நடைபெற்ற இந்த CME-இல் ஏறக்குறைய 900 நபர்கள் பங்கேற்றனர்.

அவசர சிகிச்சைகள் மட்டும் வழங்கப்படுவதால் இயல்பாக வரும் நோயாளி எண்ணிக்கை  குறைவாக உள்ளது. எனவே, மருத்துவர்களுக்கு அதிக ஒய்வு கிடைப்பதால் அதனை ஆக்கப்பூர்வமாக, நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கப் பயன்படுத்துகின்றனர். மருத்துவ ஆய்வுப் பத்திரிக்கைகளுக்கு ஆய்வுக் கட்டுரைகளை அனுப்ப, மருத்துவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். ஊரடங்குக் காலத்தில் 34 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

செவிலியர்களும் எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு, அரவிந்திலேயே உருவாக்கப்படும் கண் ஒளி மற்றும் Compassion பத்திரிகைகளுக்கு 35 கட்டுரைகளை ஊரடங்கு காலத்தில் எழுதியுள்ளனர்.

திறமைகளை வெளிப்படுத்தும் செவிலியர்கள்

மற்ற கிளைகளைப் போலவே இங்கும் செவிலியர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் மிகப் பாதுகாப்பான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. அவர்களை முறையாகப் பின்பற்றவும் வழிவகைகள் செய்யப்பட்டன. சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வைப்பதிலும் முகமூடிகளை எப்போதும் அணிந்திருக்க வைப்பதிலும் ஆரம்ப நாட்களில் சவாலாக இருந்தது. தொடர்ச்சியான அறிவுரைகள் மற்றும் கண்காணிப்பிற்கு பிறகு செவிலியர்கள், மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களையும் மாற்றிக் கொள்ள தொடங்கினர். செவிலியர்களின் முழுமையான மேம்பாட்டை மனதில் கொண்டு பல மேம்பாட்டு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சிறப்பு விரிவுரைகள், பிராஜெக்ட் பணிகள் என வழக்கமான கல்வி செயல்பாடுகள் நடத்தப்பட்டன. Essilor மற்றும் Zeiss நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் வகுப்புகளிலும் சிலர் கலந்து கொண்டனர். விளையாட்டுகளும் யோகா பயிற்சிகளும் உடலையும் மனதையும் ஊக்கத்துடனும் அமைதியுடனும் வைத்திருக்க உதவுகின்றன.

இந்த ஊரடங்குக் காலம், நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருந்த திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. புதுமையானவற்றை செய்தும் பயன்படுத்திய பொருட்களிலிருந்து கலைப் பொருட்களைச் செய்தும் அசத்தினர்.

புதிய சூழலை எதிர்கொள்ள புதிய கண்டுபிடிப்புகள்

பேப்பர் உள்ளிட்ட பலரும் தொடும் பொருட்களில் வைரஸ் இருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது. வைரஸை கொல்வதற்கு ஆங்காங்கே பொதுமக்கள் செய்தித்தாள்கள், காய்கறிகளை சில மணிநேரம் வெயிலில் காய வைப்பதைப் பார்த்து வருகிறோம். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை இந்திய அரசு ஊக்குவித்தாலும், பெரும்பான்மையானவர்கள் குறிப்பாக கல்வியறிவற்றவர்கள், வழக்கமான முறையில் பணத்தை நேரிடையாக செலுத்தவே விரும்புகிறார்கள்.

கொரோனோ நோய்த்தொற்று அச்சுறுத்தல் உள்ள இந்த நாட்களில் பணத்தை எவ்வாறு கையாளுவது எனும் குழப்பம் அனைவருக்கும் உள்ளது. காய்கறி வியாபாரி ஒருவர், பணத்தை நேரிடையாக வாங்காமல் ஒரு பெட்டியில் போடுமாறு கூறியதைக் கேட்ட தேனி-அரவிந்த் CMO Dr. தத்தா அவர்களுக்கு இதை நாமும் பின்பற்றலாம் என்ற யோசனை வந்தது. அவரது யோசனைப்படி, திருநெல்வேலி-அரவிந்திலும் பணம் செலுத்த வேண்டிய நோயாளிகள், பிளாஸ்டிக் பாட்டிலில் பணத்தைப் போடுகின்றனர். நாளின் இறுதியில் அந்த பணம் முழுவதையும் ஃபார்மோலின் எனும் வேதி திரவம் தடவப்பட்ட துணி உள்ள மறொரு பெட்டியில் வைக்கப்படுகிறது. இந்த முறையால் ரூபாய் நோட்டுகளால் வைரஸ் பரவுவது தடுக்கப்படுகிறது. மறுநாள், அந்தப் பணம் வங்கியில் செலுத்தப்படுகிறது. விஷன் சென்டர்களிலும் இந்த முறையைப் பின்பற்ற, ஃபார்மோலின் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மருத்துவமனைக்கு பல கூரியர்கள் வருவதால் அவற்றைப் பயன்படுத்தும்முன் தூய்மைப்படுத்த வேண்டியது கடமை. இதற்காக, புற ஊதா ஒளியுடன் (UV light) ஒரு பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது. கையுறைகள் அணிந்து கூரியர்களை அதனுள் ஓர் இரவு முழுவதும் வைத்து தூய்மைப்படுத்தப்படுகின்றன. பயன்படுத்தப்பட்ட முகமூடிகளை (mask) தூய்மையாக்கவும் இந்த அறை பயன்படுத்தப்படுகிறது.

பணியாளர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சிறிய முயற்சி, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்புப் பகுதியில் (post-operative care area) பயன்படுத்த பிளாஸ்டிக் தாளால் மூடப்பட்ட தற்காலிக அங்கி ஒன்றை (temporary hood) உருவாக்கியது. பொதுவாக, பொது மயக்க மருந்துக்குப் பிறகு, நோயாளிகள் குறிப்பாக குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் முடிந்த உடன் அடிக்கடி இருமல் ஏற்படும். படுத்துள்ள நோயாளியின் மேல் இந்த மூடி போன்ற அங்கியை வைக்கும்போது அவர்கள் இருமினாலும் நீர்த்திவலைகள் பரவாமல் தடுக்கப்படுகிறது. இதற்கு பயன்படுத்தப்படும் தாள்கள், phaco cassetttes-இல் இருக்கும். அவற்றை மூடி போன்ற அங்கி (hood) அளவிற்கு ஏற்றவாறு மறுஅளவிடப்படுகின்றன.

மருத்துவமனையின் தூய்மை மிகவும் முக்கியம் என்பதால் இல்லப் பராமரிப்பு மற்றும் துப்பரவுப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, புதிய குப்பை பைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு அங்கி (gown) தயாரிக்கப்பட்டது. ஓர் அங்கிக்கு 15 ரூபாய்தான் செலவு. சோப்பு நீரில் அலசி, பின் இவற்றை மீண்டும் பயன்படுத்தலாம் அல்லது அப்புறப்படுத்தலாம்.

படத்தில் காட்டியுள்ளபடி மேஜையில் விரிக்கும் நீல நிற பிளாஸ்டிக் ஷீட் கொண்டு பாதுகாப்பு கவசம் (PPE) தயாரிக்கப்படுகிறது. இது முழு பாதுகாப்பை அளிக்காவிட்டாலும் உடலின் முன் பகுதியைப் பெரிதும் மறைக்கிறது. இதனால் பரிசோதனை, சிகிச்சையின்போது நோயாளியிடமிருந்து இரத்தத் துளிகள் வெளிப்பட்டால் எளிதில் துடைக்க முடியும். இதன் மொத்த செலவு 60 ரூபாய் மட்டும்தான்.

ஃபண்டஸ் ஃபோட்டோ, OCT உள்ளிட்ட பரிசோதனைகளின்போது, தொழில்நுட்ப பணியாளருக்கும் நோயாளிக்கும் இடையில் ஒரு பிளாஸ்டிக் தாள் பொருத்தப்படுவது நோய்த்தொற்று, நீர்த்திவலைகள் பரவாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏ.சி பயன்படுத்தப்பட வேண்டிய மற்றும் வெப்பநிலை பராமரிக்கப்பட வேண்டிய பகுதிகளில் மட்டும்  கதவுகள் மூடப்பட்டுள்ளன. கதவைத் திறக்க டிஸ்யூ (tissue) அல்லது பயன்படுத்தப்பட்ட காகிதம் உதவியாக உள்ளது. மேலும், கதவுகளின் கைப்பிடிகள், மணிக்கு ஒருமுறை லைசால் (Lysol) கொண்டு கைப்பிடிகள் சுத்தம் செய்யப்படுகின்றன.

சில இடங்களில் கதவுகளின் கைப்பிடிகளைத் தொடாமல் திறக்க, உலோக கிளிப் ஒன்று கதவின் கீழே பொருத்தப்பட்டுள்ளது. இதைக் காலால் இயக்கலாம்.

  • கிருமி நாசினி உள்ள பாட்டில்களைக் கைகளால் தொடுவதை தவிர்க்க, காலால் அழுத்தும் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. 560 ரூபாய் மதில் விலை குறைவான இந்த சாதனத்தால் பலரும் பாட்டில்களைக் கைகளால் தொடுவது தடுக்கப்படுகிறது.
  • மருத்துவர்கள், தூரத்திலிருந்து நோயாளிகளை பரிசோதிக்கும் வகையில் எளிய சாதனம் உருவாக்கப்பட்டு அதில் லென்ஸ் (90D) வைக்கப்படுகிறது. 20D லென்ஸிற்கான ரப்பர் உறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சுத்தம் செய்வது எளிது.

Click to view other newsletters